நிகழ்ச்சிகள் & விழாக்கள் / Events & Festivals

Temple Events & Festivals

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் . மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.

பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனான முருகப் பெருமான்-தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதோடு ஸ்ரீவள்ளிக்குறத்தி அவதரித்த நாளும் இந்த நாள் தான். பங்குனி உத்திர திருவிழா, இதற்குப் பெயர் கோடை வசந்த விழாவின் நுழைவு விழா என்று தான் பொருள். பங்குனி மாதம் பிறந்து விட்டாலே கோடையும் வசந்தமும் வந்து விட்டது என்று தான் அர்த்தம். கோடை காலத்தின் ஆரம்பமே பங்குனி மாதம் தான். அதனால் தான் அதை வரவேற்கும் விதமாக விதமாக வசந்த விழா கொண்டாடப்படுகிறது.

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும்.

சூரசம்ஹாரம் என்பது சூரபத்மன் எனும் அரக்கனை அழித்த நிகழ்வாகும். சூரபத்மனை முருகன் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய ஆலயங்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள். பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தியான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால் வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது.

கௌமாரம் எனும் சமயத்தின் முழுமுதற் கடவுளான முருகப்பெருமானுக்கு வள்ளி மற்றும் தெய்வானை என இரு திருக்கல்யாணங்களை முருக பக்தர்கள் நடத்துகின்றனர். தெய்வானை திருக்கல்யாணம் : சூரசம்ஹார வெற்றிக்காக இந்திரன் தன்னுடைய மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்து வைத்தார். இத்திருக்கல்யாணம் திருப்பரங்குன்றத்தில் நடந்ததாக அத்திருத்தலத்தின் வரலாறு கூறுகிறது. வள்ளி திருக்கல்யாணம் : முருகன் குறவர் மகளான வள்ளியோடு புரிந்த காதல் திருமணமாகும்.

கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனைச் சுற்றி அடைத்து “சொக்கப்பனை”க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர். முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.

Our next event will be posted once date and venue are finalized.